தைப்பூசம்.... ஊரில் குலதெய்வ வழிபாடு. பெளர்ணமி இரவில் விளக்கு பூஜையும், மறு நாள் சிறப்பு பூஜையும் என்று வருடா வருடம் இருக்கும். நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் பழநியில் இருந்து எடுத்து வைத்த பிடி மண்ணாக கம்பந்தட்டைகளுக்கு கீழ் இருந்த முருகன், இன்று கோயிலும் மண்டபமுமாக வளர்ந்திருந்தார். சாத்தூரில் இருந்து சில கி.மீ தொலைவில் பனையடிப்பட்டியில் கோயில் அமைந்திருக்கிறது. வழியில் சாலையில் சோள/கம்பந் தட்டைகளைப் போட்டு, வண்டி ஏறி செல்ல செல்ல தான்யங்களை உதிர்த்துக் கொள்கிறார்கள். ஆங்காங்கே தான் பசுமை தெரியும்... மற்றபடி வெய்யிலின் உக்கிரத்தை ஏற்றுவது போல மஞ்சள் நிறத்தில் சோளக்கதிர்களும் கம்பங்கதிர்களும்...
திருமணமான உடன், குழந்தைகள் மொட்டை என்பது தவிர இந்த வழிப்பாட்டிற்கு பரபர சென்னையில் இருந்து செல்வது என்பது எங்களுக்கு இயலாதது தான். எப்பொழுதும் அத்தையும் மாமாவும் தவறாமல் செல்வார்கள் எங்களுக்கும் சேர்த்து. சென்ற முறை, நினைவில் மட்டுமே மாமா தங்கியதால் செல்ல அனுமதி இல்லை. இந்த முறை அத்தைக்கும் அலைச்சல் இயலவில்லை என்று எப்பொழுதும் செல்பவர்களைத் தவிர குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம். எப்பொழுது நாங்கள் சென்றாலும் இதை செய், அதை செய் என்று அத்தை மாமா சொல்ல ஈடுபாட்டுடன் செய்வோம். இந்த முறை இருவரும் இன்றி உற்றாரும் உறவினரும் இருந்தாலும் அன்னியமாக இருந்தது வழிபாடு; பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது... எத்தனை வயதானாலும்... சில நினைவுகள் மயிலிறகாக மனதை வருடினாலும் மீண்டும் வராத காலங்கள் என்று மனதையும் பாரமாக்கும்.
முருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள். பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். முட்புதர்களும் பார்த்தீனியமும் மண்டிக்கிடந்த நிலத்தில் நடந்தோம்.
“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ஆங்காங்கே மயில் இறகுகள் மழலைகளுக்காக இறகை உதிர்த்து சென்றிருந்தன.
கிள்ளைகளின் முன் ஓடி மறைந்தன இரு மயில்கள்; வானில் பறந்து மறைந்தது மற்றொரு மயில். நான்கைந்து புளியமரம் தோப்பாக நின்றது. மயிலைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இறகுகள் சேகரித்தனர் குழந்தைகள். மயிலிறகு மட்டுமல்ல... பருந்து, குயில் என்று எல்லா பறவைகளின் இறகுகளும் கோலமிட்டிருந்தன மழலைகளுக்காக. உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்?
சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ?
மெலிதான பாரம் மனதில் தங்க முடிந்தது கோயில் பயணம்.
16 comments:
\\“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. //
சூப்பர் அமுதா :)
இந்த பதிவு ஒரு மயிலிறகாக உங்கள் ப்ளாகில் பொதிஞ்சு வச்சிருக்கீங்க..
நல்ல பதிவு அமுதா !
எங்களையும் அழைத்து சென்றது போல் இருந்தது !
//பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது..//
உண்மை தான். நிழலின் அருமை ...
//உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்?//
கண்டிப்பாக இருக்கும்...மயிலிறகை தேடி, திண்ணை ஆறு என்று நாம் நினைவுகூறுவது போல், அவர்கள் பிற்காலத்தில் வேறொன்றை தேடி மயிலிறகை நினவு கூறுவார்கள்.
”அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ” நல்ல ஜோக்
//முருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள்
//
:)
//முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும் //
:(
/பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். /
;-)
//உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்?//
புத்தகத்துள் பொதிந்து வைத்த மயிலிறகாய் நிச்சயம் இருக்கும்.
அருமையான இடுகை.
//சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ?//
அழகா சொன்னீங்க.. பனையோலைக்கென்றே ஒரு வாசம் உண்டு. வெள்ளரிப் பிஞ்சுகளும் அங்கு நல்லாருக்கும்.
இருக்கண்குடி போனீங்களா இல்லையா?
மீண்டும்... மீண்டும்... படிக்க தூண்டும் அருமையான அனுபவ பகிர்வு..!
நல்லதொரு புத்தகமாய் பாதுக்காக்கவேண்டிய பதிவு.அழகும் அன்பும் நிறையக் கண்டேன் அமுதா.
நல்ல பகிர்வு.
சாத்தூருக்குத் தாங்கள் வந்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் எனக்கு வந்தது.
நன்றி முத்துலெட்சுமி
நன்றி அகாஅழ்.
/* அவர்கள் பிற்காலத்தில் வேறொன்றை தேடி மயிலிறகை நினவு கூறுவார்கள்.*/
உண்மை... தலைமுறைகள் மாற மாற அனுபவங்களும் மாறுகின்றன
நன்றி அண்ணாமலையான்
நன்றி அப்துல்லா
நன்றி முல்லை
நன்றி அம்பிகா
நன்றி உழவன் /*இருக்கண்குடி போனீங்களா இல்லையா?*/ ஒரு நாள் பயணம் தான். அது போய் ரொம்ப நாளாச்சு ம்...
நன்றி ஜீவன்
நன்றி ஹேமா...
நன்றி மாதவராஜ். உங்களுடன் அலைபேசியில் பேசியதில் மகிழ்ச்சி. சூழ்நிலைகளால் ஒரு நாள் பயணமாகிவிட்டதால் சந்திக்க இயலவில்லை.
kallik kaatu ithigasama ithu?
சற்றே பெரிய கவிதையைப் போல் இருக்கிறது அமுதா.
மயிலிற்கால் வருடியது போல் சொற்தேர்வு.
யாழ் குட்டி செம்ம க்யூட்!
//உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்?//
கண்டிப்பா இருக்கும், அவங்க இந்தப் பதிவை படிக்கும் போது.
மென்மையா எழுதியிருக்கீங்க பயண அனுபவத்தை.
//சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ?//
உண்மை அமுதா. நாங்களும் போன வாரம் திருநெல்வேலி போயிருந்தோம். கோவில்பட்டியில் சேவும் மிட்டாயும் வாங்கினோம். ஒலை பட்டியை எதிர்பார்த்த எனக்கு பிளாஸ்டிங் பை வருத்தம் அளித்தது.
Post a Comment