என் மேகம் ???

Monday, November 23, 2009

வண்ணத்துப்பூச்சி எங்கே போச்சு?



பரபரத்துக் கொண்டிருந்த போக்குவரத்து நிறைந்த சாலையை மின்னலாக அழகுபடுத்தி படபடத்து மறைந்தது வண்ணத்துப்பூச்சி ஜோடி ஒன்று. அந்த அழகை எவரும் இரசித்ததாகத் தெரியவில்லை. பட்டாம்பூச்சி பறப்பதால் வசந்த காலமோ என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. வெயிலும் மழையும் தவிர காலத்தை கணிக்க வேறொன்றுமில்லாத அலுப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் மீண்டும் மேம்பாலமருகே பட்டாம்பூச்சிகள் ஒன்றை ஒன்று துரத்தி மறைந்தன. எங்கே சென்றிருக்கும் என்ற எண்ணத்துடன் வண்ணத்துப்பூச்சி நினைவுகளைத் துரத்தியது மனம்.

வண்ணத்துப்பூச்சி மட்டும் தானா? பொன்வண்டு, மின்மினி பூச்சி என்று எத்தனை பூச்சிகள் மனதைக் கவர்ந்தன. தீப்பெட்டிக்குள் குடி வைக்கப்பட்டு இலைகளால் வளர்க்கப்படும் பொன்வண்டு, பின் கருணையால் விடுவிக்கப்படும். மின்மினி பூச்சிகளைக் காண்பதற்காகவே முற்றத்து விளக்குகள் அணைக்கப்படும். மிகவும் பாவப்பட்ட ஜீவன் இந்த பட்டாம்பூச்சி தான்.

வசந்தத்தின் வருகையை பூமெத்தை விரித்து தாவரங்கள் வரவேற்க, மெலிதான சில்லென்று காற்று கட்டியம் கூற வண்ணத்துப்பூச்சிகளின் நடனம் துவங்கும். பெரிதாக கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இராஜா வர, ஆழ்ந்த பழுப்பு வண்ணத்தில் கருப்பு கோடுகள் அலங்கரிக்க இராணி வர, சின்ன சின்ன மஞ்சள் நிறத்து சேடியர் பூக்களை முத்தமிட, இன்னும் பல வண்ணங்களில் ஏனையோர் நடனமிட வசந்தம் புன்சிரிப்போடு நுழையும். பூக்களை முத்தமிட்டு செல்லும் அந்த பட்பட் பட்டாம்பூச்சிக்கு எப்படி தான் என் கைகளின் வாசனை தெரியுமோ? சட்டென்று மறைந்து மாயாவியாக மீண்டும் நான் விலகிய பின் வந்தமரும்.

குட்டிப்பையன்களின் கை சும்மா இருக்காது. வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் அவர்கள் கைகளில் ஒட்ட, பிளாஸ்டிக் பைகளில் படபடக்கும் நிறமிழந்தாலும் நிறம் மாறா வண்ணத்துப்பூச்சிகள். “உன்னை அடைத்தால் எப்படி இருக்கும்” என்ற சண்டைகளுடன் அவற்றுக்கான விடுதலை போராட்டங்கள் ஆரம்பிக்கும். பட பட என்று சிறைக்குள் போராடி ஓய்ந்து விழும் சமயம் தான் பையன்களின் மனம் கரையும், சிறை திறக்கும். சற்றே தளர்ந்து நகர்ந்து, பின் சுதந்திரக்காற்றின் ஸ்பரிசத்தில் துள்ளி எழுந்து மீண்டும் படபடத்து பறந்து மறையும் வானவில் வண்ணங்கள். பட்டாம்பூச்சியின் வளர்ச்சியைப் பாடத்தில் மட்டுமே கவனித்திருந்தேன் சில வருடங்கள் முன் வரை...

அலுவலகம் முடிந்து வரும் வேளையில், நந்தினி ஓடிவந்தாள் "அம்மா, பட்டாம்பூச்சி முட்டை போட்டிருக்கும்மா வந்து பாரேன்... ஐயாப்பா காட்டினாங்க". எனக்கு அது பட்டாம்பூச்சி முட்டை என்று தோன்றவில்லை. அவள் திருப்திக்காக எட்டிப்பார்த்தேன். "அம்மா முட்டை பொரிச்சு புழு வந்துடுச்சு... இலையெல்லாம் ஓட்டை ஓட்டையா இருக்கு பாரேன்". கம்பளி புழு என்றால் எட்டடி ஓடும் நான் அவளுக்காக மீண்டும் எட்டிப்பார்த்தேன். "அம்மா கூடு கட்டி உள்ள போயிடுச்சு...". மெல்ல ஆர்வம் எட்டிப் பார்க்க தினம் எட்டிப் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வந்து இருள் கவியும் வரை, தாத்தாவும் பேத்தியும் அந்த செவ்வரளிச் செடியருகில் கழிக்கும் நேரங்கள் கவிதை போன்று இனிமையானவை. "அம்மா பட்டாம்பூச்சி பறந்து போச்சு..." கண்களில் அதிசயத்துடன் மகள், பேத்திக்கு இயற்கையைப் போதித்த திருப்தியில் மாமா.

மெல்ல எட்டிப் பார்த்தேன்... பட்டாம்பூச்சியின் சாட்சியாக காலியான கூடு. எங்கே பறந்து போச்சு? மீண்டும் வீடு தேடி வருமா என தெரியவில்லை. எத்தனை பேருக்கு அமையும் பிறந்ததில் இருந்து இறுதி வரை அதே இடத்தில் வாழ்க்கை? உயிர் கூட்டைப் பிரியும் வரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்து எங்கே முடியப் போகிறதோ??? செவ்வரளி தழைத்தவுடன் மீண்டும் வந்தது வண்ணத்துப்பூச்சியின் முட்டைகளும் தாத்தா பேத்தியின் கவிதையான நேரங்களும். இப்பொழுது செவ்வரளிச் செடியும் இல்லை, மாமாவும் இல்லை... நினைவுகள் மட்டும் நெஞ்சில் பசுமையாக வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களாக... நினைவு இருக்கிறதா என் செல்ல மகளே ஐயாப்பாவுடனான அந்த இனிய பொழுதுகள்?

17 comments:

ஸ்வர்ணரேக்கா said...

//எத்தனை பேருக்கு அமையும் பிறந்ததில் இருந்து இறுதி வரை அதே இடத்தில் வாழ்க்கை? உயிர் கூட்டைப் பிரியும் வரை... எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்து எங்கே முடியப் போகிறதோ???//


ரொம்ப touch பண்ணிட்டீங்க இந்த lineல...

ராமலக்ஷ்மி said...

வண்ணத்துப்பூச்சியுடனான நினைவலைகள் நெகிழ்சி அமுதா!

பூங்குன்றன்.வே said...

வண்ணத்துபூச்சியின் அழகை போல,வர்ணங்கள் போல நன்றாக இருக்கிறது உங்களின் இந்த பதிவு.

அ.மு.செய்யது said...

மனதை நெகிழச்செய்யும் ஒரு சிறுகதைக்கான கரு, இந்நிகழ்வில்
அடங்கியிருக்கிறது.

ரசித்து வாசித்தேன் அமுதா...ரசனையான பதிவு.

Hats off !!

pudugaithendral said...

வண்ணத்துப்பூச்சி எங்கயும் போகலை. மனதுக்குள் நினைவா பதிஞ்சிருச்சு.

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான, அழகான, நெகிழ்வான பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

அழகான பதிவு

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பதிவு,அமுதா.

ஊர்சுற்றி said...

அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வெயிலும் மழையும் தவிர காலத்தை கணிக்க வேறொன்றுமில்லாத அலுப்பு ஏற்பட்டது //

அழகான நெகிழ்வான பதிவு அமுதா.

லெமூரியன்... said...

அருமையான பகிர்வுங்க....மின்மினி மற்றும் பொன்வண்டு....சின்ன வயது நியபகங்களுக்கு கொண்டு சென்று விட்டீர்கள்...
நெகிழ்ச்சியான இறுதி வரிகள்.....
ரசித்தேன்..

நிஜமா நல்லவன் said...

/தீப்பெட்டிக்குள் குடி வைக்கப்பட்டு இலைகளால் வளர்க்கப்படும் பொன்வண்டு/


நானும் இது மாதிரி வளர்த்திருக்கேன். சின்ன சின்னதா வண்ணங்களில் ஜொலிக்கும் பொன்வண்டு முட்டை பார்க்க ரொம்ப அழகா இருக்கும்!

நிஜமா நல்லவன் said...

ரொம்ப பீல் பண்ண வச்சிட்டீங்களே:(

அமுதா said...

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Thamiz Priyan said...

நைஸ்!

பின்னோக்கி said...

ரோடுல போகும் போது வண்ணத்துப்பூச்சிய பார்க்கலாம் - நீங்க வண்டியோட்டாத வரை :)
---
நான் மறந்து போன பூச்சிகளை நியாபகப்படுத்திவிட்டீர்கள். கவிதையான வர்ணிப்பு, உங்களுக்கு எழுத்துக் கலை வாய்த்திருக்கிறது.
----
உங்கள் மாமா உங்கள் குடும்பத்தை கூடு போல பார்த்துக்கொண்டதான உவமை அருமை
----
கூட்டிலிருந்து அவர் வெளியே போகவில்லை. உங்களுடனும் உங்கள் குழந்தைகளுடனும் நியாபகமாக இருக்கிறார்.

Deepa said...

பதிவும் படமும் ரொம்ப அழகு!
மகளுக்கு அழகிய பொழுதுகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். அதை நினைவூட்டும் விதம் வெகு நெகிழ்வு!
பாராட்டுக்கள் அமுதா!