வாழ்க்கை என்பதே தேடல் நிறைந்தது தானே? எங்கே தேடல் தொடங்கியது என்று யோசித்துள்ளீர்களா? குழந்தைகளாக இருக்கும் பொழுது தேடுவது போல் எனக்கு தெரியவில்லை. அழகாக பூவொன்று மலர்வது போல், அவர்களது முன்னேற்றம் ஒவ்வொன்றாக நிகழ்கிறது. என்றாலும் வாழ்வின் தேடலின் அவசியம் கருதியா என்று தெரியவில்லை... நாம் தேடலை அறிமுகப்படுத்தி விடுகிறோம்.
"காணோம்... காணோம் முட்டாச்" என்று ஆரம்பித்து, "காக்கா ஓச்" என்று கூறி அழகாக ஒரு தேடலுக்கான ஆரம்பம் கொடுக்கிறோம். பின் அது கண்ணாமூச்சியாகவும், ஒளிந்து பிடித்து விளையாட்டாகவும் மாறுகிறது. சில சமயங்களில் நல்ல ட்ரெய்னிங் கொடுக்க புதையல் வேட்டையும் சொல்லித்தரப்படும்.
இந்த சுவாரசியங்களின் முடிவில் நிஜ தேடல்கள் தொடங்கும். படிப்பு, வேலை, பொருள், துணை என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். இதெல்லாம் முடிந்த ஒரு கணத்தில் கொஞ்ச நாள் தேடலை மறந்து இருப்போம் என்று தூங்கி எழுந்த ஒரு நாளில் முதல் கேள்வியாக வந்தது கணவரின் "என் பர்ஸைப் பார்த்தியாம்மா?" என்ற கேள்வி. நித்தம் தவிர்க்க முடியாத தேடலாகப் போகிறது என்ற உண்மையின் முன்னுரையுடன் என் முன் அந்த கேள்வி சிரித்தது. சிலருக்கு இது மனைவி கை தவறி வைத்த கம்மலாகவோ, சாவியாகவோ இருக்கலாம்.
என்ன ஆச்சர்யம்? தொலைந்தது சாவியோ, பர்ஸோ... ப்ரிட்ஜ் முதற்கொண்டு வீட்டின் அங்குலம் விடாது தேட வேண்டும் என்று அறிந்து கொண்டேன். எண்ணூறு சதுர அடி வீட்டை எட்டு வருடமாக தேடல் நடந்தாலும் இன்னும் கைமறந்து வைக்கப்படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை. பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.
தேடல் என்று இந்த பதிவு என் மனதில் தோன்றிய நேரத்தையும் நான் சொல்ல வேண்டும். ஊரில் வீட்டைப் பூட்டிக் கிளம்பி இரயிலைப் பிடிக்க வேண்டிய ஒரு அவசர கணத்தில் வீட்டைப் பூட்ட பூட்டும் சாவியும் இல்லை என்று அறிந்தோம். அப்பொழுது தோன்றியது, "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.