அலுவலகத்திற்கு செல்ல அரை மணி நேரமாவது நான் பயணம் செய்ய வேண்டும். வழியெங்கும் விதம் விதமான காட்சிகள் கண்ணுக்குள் விரியும்.
பரபரப்பாக வாகனங்களில் மனிதர்கள்...
சாலையோரம் தன் இடத்தைப் பிடித்துக்கொண்டு தன் வேலையில் சற்றும் சளையாது நிழலும் காற்றும் தரும் மரங்கள்...
சுறுசுறுப்பாக சாலை இடும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்...
சலையோர சுவர்களில் தீட்டப்பட்ட சித்திரங்கள்...
என்று பல பல காட்சிகள். இந்த காட்சிக்ள் மனதில் ஒரு சுறுசுறுப்பையும் உற்சாகத்தையுமே தரும்.
அன்று என்னவோ அலுவலகத்தில் கேட்ட செய்திகள் அவ்வளவு நல்ல செய்திகள் அல்ல. சற்றே வருத்தத்துடன் என் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவள் கூறிய தகவல் சற்று வேடிக்கையாக இருந்தது. அன்று அவள் அலுவலகத்திற்கு வரும் வழியில் யாரோ கடப்பாரை எடுத்துச் சென்றனராம். வழியில் ஆயுதம் சுமந்து வருவதைப் பார்ப்பது நல்லதல்ல என்று அவள் கணவர் கூறினாராம். அதன் பிறகு அவள், மூன்று பேர் கடப்பாரை எடுத்து வருவதைக் கண்டதாகவும் , அன்று அலுவலகத்தில் கேட்ட மூன்று செய்திகளுமே நல்லதல்ல என்று கூறினாள். சற்று நேரம் அந்த விஷயத்தை கேலி செய்து விட்டு மறந்தும் போனேன். மறுநாள் அலுவலகத்திற்கு ஆட்டோவில் பயணம் செய்தேன். வழக்கமான காட்சிகள்... சாலைப் பணியாளர்களைப் பார்த்தவுடன், என் மூளை, அவர்கள் கையில் ஆயுதம் இருக்கா எனக் காண தலைப்பட்டது. ம்ம்... மண்வெட்டி... வழி நெடுக கண்ணில் பட்டதெல்லாம் மண்வெட்டி தான்... இல்லையென்றால் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து ஒரு மண்வெட்டி கண்ட பின் தான் மீண்டது. அலுவலகத்தை அடைந்த உடன், இன்று என்ன செய்தி என்று மனம் குழப்பமானது. என் குழப்பம் நீடிக்க அன்று நாள் ஒரு சாதாரண நாளாகத் தான் சென்றது. அதன் பின் என் பயணங்களில் மண்வெட்டியோ கடப்பாரையோ வரவில்லை.
நம் வாழ்வும் இப்படித்தான் சில வேளைகளில் செல்கிறது. நல்ல விஷயங்களைக் காணும் வரை எந்த குழப்பமும் இன்றி, செல்கிறது. ஏதேனும் குறை உள்ளதா என்று காண ஆரம்பித்தால் வழியெங்கும் மண்வெட்டி கதை தான். சுற்றி இருக்கும் நல்ல விஷயங்கள் கண்ணில் படுவதில்லை...