நிகழும் வரை எண்ணியதில்லை... நெடுநாட்கள் வாழ்ந்த ஊரும் அன்னியமாகும் என்று. கோவையில் வளர்ந்தாலும் பெற்றோர் இடம் மாறியவுடன் ஊர் அன்னியமானது. வாழ்க்கைப்பட்ட ஊரும் அப்படி ஆகி விடும் என்று எண்ணியதில்லை. என்றாலும் மாமா மறைந்த பின், அத்தை இங்கு வந்த பின் ஓரிரவு பயணம் என்ற ஊர் தூரமாகித்தான் போனது.
என்றாலும் அதை விடக்கூடாது என்பது போல், சொந்த ஊரில் விசேசம் என்றால் மதுரையில் தங்கி வீட்டில் சில மணித்துளிகளேனும் செலவழிப்பது வழக்கம். திருமணமாகி வந்த பொழுது. தெருவில் ஒவ்வொரு வீடும் பரிச்சயம். ஊருக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் அட்டண்டன்ஸ் கொடுப்பதற்கும், மறுநாள் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு ஸ்பெசாலிட்டியும் வந்துவிடும். வாய்த்துடுக்காகப் பேசினாலும் மறந்து அன்பு காட்டும் நட்பு வட்டம்.அந்த அன்பை மகிழ்ச்சி பகிரும் சுபதினங்களிலும் காணலாம், துக்கம் பகிர நேரும் துயரத்திலும் காணலாம்.
இப்பொழுது அனேகமாக அருகில் இருந்தவர் பலர் இடம்மாறிவிட்டனர். வாழ்க்கையே மாற்றம் நிறைந்தது தானே? என்றாலும் இருப்பவர்கள் காட்டும் அன்பு அலாதியானது. இதோ, குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, வேலைகள் முடித்து நிம்மதியாக வரலாம். அவர்களும் சுகமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். இங்கு போல் அவர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலை இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், சிரமம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் ஹோட்டல் சென்று உண்ண முயல்வோம். பெரும்பாலான நேரங்களில் அது தோல்வி தான்.வேண்டாம் என்றாலும் விருந்துபசரிப்பில் நனைந்து திரும்பும் பொழுது தோன்றும், “ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.
3 comments:
மாற்றங்களிலும் மாறாத உறவு....
அழகு
//“ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.//
உண்மைதான் அமுதா. அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
வாழ்வின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர இவர்கள் தானே!
Post a Comment